தமிழகம்

சட்டை பாக்கெட்டில் கட்சித் தலைவர் படம் குறித்து சர்ச்சை கருத்து: ஓபிஎஸ் - செங்கோட்டையன் இடையே மோதல்

செய்திப்பிரிவு

சென்னை: கட்சி மாறியது, சட்டைப் பாக்கெட்டில் உள்ள படம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதம் வருமாறு:

திமுக உறுப்பினர் ஓபிஎஸ்: இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கப் படாதது பொதுமக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லதும் மாற்றம்தான், கெட்டதும் மாற்றம்தான். எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு கிடைத்துள்ளதோ பெரும் ஏமாற்றம்தான். அவை முன்னவர்

செங்கோட்டையன்: தேர்தல் நேரத்தில் அறிவிக்கும் திட்டங்களை 5 ஆண்டுக்குள் படிப்படியாக நிறை வேற்றுவோம். நீங்கள் சொல்வதைப்போல 3 மாதத்தில் ஒருசரித்திரம் படைக்க இயலாது.

தமிழகமே பாராட்டும் ஒரு தூய ஆட்சியை, ஏமாற்றத்தை உருவாக்குகிற ஆட்சி என்று நீங்கள் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் இடம்மாறி இருக்கிறீர்கள். பரவாயில்லை அதற்காக இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை.

ஓபிஎஸ்: முதலில் இடத்தை மாற்றியது அவர்தான் (செங்கோட்டையன்) என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் ராஜ்மோகன்: அமைச்சர் செங்கோட்டையன் முதலில் இடத்தை மாற்றிய போதும் தனது பாக்கெட்டில் உள்ள புகைப்படத்தை (ஜெயலலிதா) மாற்ற வேண்டாம் என்று சொன்னவர் முதல்வர் விஜய். ஆனால், உங்கள் (ஓபிஎஸ்) பாக்கெட்டை பார்க்கும்போது இடமும் மாறியிருக்கிறது, படமும் மாறியுள்ளது.

ஓபிஎஸ்: திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியாக பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை இதயங்களில் என்றும் கடைசி காலம் வரை வைத்திருப்போம். படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கு இல்லை.

(இதையடுத்து செங்கோட்டையன் ஒரு கருத்தை முன்வைத்தார். அதை நீக்கக் கோரி திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.)

பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்: தனிபட்ட விவாதம் வேண்டாம். இருபக்கமும் கூறப்பட்ட கருத்துகளை நகைச் சுவையாக எடுத்துக் கொள் ளுங்கள்.

ஓபிஎஸ்: எந்த நிலையிலும் நான் மாற மாட்டேன். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாகத்தான் என்னுடைய நிலை சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கும். படத்தை வைத்திருக் கிறீர்கள் என்று அமைச்சர்கள் கேட்பதெல்லாம் தவறு.

செங்கோட்டையன்: என்னை பொறுத்தவரை படத்தை வைத்திருப்பதை பற்றி நான் பேசவில்லை. படத்தைவைத்துக் கொண்டு ஏமாற்றாதீர்கள் என்று நீங்கள் சொல்வதுதான் வேடிக்கையாக உள்ளது.

நான் ஏமாற்றுகிறேன் என்றால், நீங்களும் ஏமாற்றுகிறீர்கள் என்று அர்த்தமா? இவ்வாறு விவாதம் நீண்டது. அப்போது இருதரப்பையும் பேரவைத் தலைவர் சமாதானம் செய்து முடித்துவைத்தார்.

SCROLL FOR NEXT