தேனி: தேனியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்துக்கு இடையூறு செய்ததாக தவெக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட தவெகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேனியில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசினார். அவர் பேசும்போது தவெக தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அப்போது பொதுக்கூட்ட மேடைக்கு அருகேயுள்ள தேனி - மதுரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தவெகவினர் தொடர்ந்து விசில் அடித்து இடையூறு செய்துள்ளனர். பொதுக்கூட்டம் முடிந்து சாட்டை துரைமுருகன் சென்ற பிறகு, 5 கார்களில் தவெக வினர் அங்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்நிலையில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.
அதி்ல், சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்டதாக லெஃப்ட் பாண்டி மீது ஜன. 24-ல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த முன்விரோதம் காரணமாக லெஃப்ட் பாண்டி தூண்டுதலின் பேரில் தவெகவினர் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக கூறியிருந்தார்.
இப்புகாரின் பேரில் தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி, சின்னமனூர் முகமதுசலாம், கவுதம், தனவேந்தன் உட்பட பலர் மீது தேனி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.