தமிழகம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைக்க கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறையில் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 1972ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் துவங்கப்பட்ட நிறுவனமாகும். இது துவங்கப்படட காலத்திலிருந்து அரசின் உணவுத் துறையின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது.

இதன் மையமான நோக்கமே தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்வது, பொதுவிநியோக திட்டங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவது இதன் மூலம் நடைபெற்று வருகிறது.

மிக முக்கியமாக மாநிலம் முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சுமார் 3148 உள்ளன. அவ்வப்போது தேவையொட்டி சுமார் 4500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலைகள் 21 இயங்கி வருகிறது. இந்த அரிசி ஆலைகள் மூலம் மாதந்தோறும் சுமார் 52,500 மெட்ரிக் டன் அரிசி அரவை நடைபெற்று வருகிறது. இதற்கான நிரந்தர குடோன்களும், தற்காலிக குடோன்களும் ஏராளமாக உள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகளின் நெல்லை ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உடனுக்குடன் அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் கொள்முதல் பணியை கூட்டுறவு சங்கங்கள், மற்றும் டான்பெட் (TANFED) Tamil Nadu cooperative marketing federation limited போன்ற அமைப்புகளை ஈடுபடுத்த மாநில அரசு முடிவு செய்திருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கெனவே, கூட்டுறவுத் துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்நிறுவனத்தை அதனுடன் இணைத்தால் நெல் கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகையை உரிய காலத்தில் பட்டுவாடா செய்வது உள்ளிட்டவற்றால் பாதிப்பு ஏற்படும். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வார்கள்.

எனவே, மாநில அரசு இந்த முடிவை உடன் கைவிட வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தொடர்ந்து உணவுத் துறையின் கீழ் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு சார்பில் வலியுறுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT