குழந்தை ஏசு சொரூபத்தை கண்டு ரசிக்கும் சிறுவர்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை/காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் திருப்பலியை நிறைவேற்றினார்.
தொடர்ந்து நேற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் இருதயஆண்டவர் திருத்தலம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
காஞ்சிபுரம் நகரில் உள்ள தூய ஆவே மரியா ஆலயம், சிஎஸ்ஐ தூய யோவான் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ஆலய மணிகள் முழங்க, இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் சிறப்பு ஆராதனைகள் தொடங்கின. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துக் கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
ஆலய வளாகங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில்கள் மற்றும் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற கிறிஸ்வர்கள்.
இதில், கிறிஸ்தவ மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். மேலும், வீடுகளில் குடில் அமைத்து குழந்தை இயேசு பிறப்பை சித்தரிக்கும் காட்சியை அலங்கரித்து வைத்திருந்தனர்.
இதேபோல், சிஎஸ்ஐ தேவாலயம் ஆர்.சி. சர்ச், இசிஐ சர்ச், பெந்தேகோஸ்தே உள்ளிட்ட தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ மக்கள் குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் வழிபாடு முடிந்ததும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும், கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்த நபர்கள் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்: திருவள்ளூர், ஜே.என்.சாலை புனித பிரான்சிஸ் சலேசியர் தேவாலயம், பெரியகுப்பம் டி.இ.எல்.சி தேவாலயம், மணவாள நகர் ஜெயகோபுரம் ஏ.ஜி.தேவாலயம் மற்றும் ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என, மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர், நண்பர்களுக்கு இனிப்பு மற்றும் கேக்குகளை வழங்கி மகிழ்ந்தனர்.