சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, சென்னை - மங்களூர் ரயில், ஈரோடு - நாகர்கோவில் ரயில் உள்பட 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்விவரம் வருமாறு: மங்களூரு சந்திப்பில் இருந்து டிச.23, 30 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.10 மணிக்கு சிறப்பு ரயில் (06126) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.24, 31 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (06125) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூர் சந்திப்பை சென்றடையும்.
ஈரோடு - நாகர்கோவில் (வழி:அரக்கோணம், எழும்பூர்): ஈரோட்டில் இருந்து டிச.23, 30 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் (06025) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பை அடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து டிச.24, 31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் (06026) புறப்பட்டு, மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோட்டை அடையும்.
இந்த ரயில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நான்குநேரி, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் சந்திப்பை அடையும்.
செகந்திராபாத் - வேளாங்கண்ணி (வழி: சென்னை எழும்பூர்): செகந்திராபாத்தில் இருந்து டிச.23-ம் தேதி இரவு 7.25 மணிக்கு சிறப்பு ரயில் (07407) புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து டிச.25-ம் தேதி காலை 8 மணிக்கு சிறப்பு ரயில் (07408) புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திரபாத்தை அடையும். இதுதவிர, எஸ்எம்விடி பெங்களூரு - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
3 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது. எஸ்எம்விடி பெங்களூரு - கொல்லம் இடையே சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை (டிச.22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.