விஜய் உடன் கருப்பையா | கோப்புப் படம்

 
தமிழகம்

தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா நியமனம்

மோகன் கணபதி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததை அடுத்து, விஜய்க்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. இதையடுத்து இன்று அவர் முதல்வராக பதவியேற்றார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரோடு, ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதையடுத்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய், தனது அலுவலகப் பணிகளைத் தொடங்கினார். எம்எல்ஏக்கள் பதவியேற்பு நாளை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கோப்பில் விஜய் கையெழுத்திட்டார்.

சோழவந்தான் தனித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான கருப்பையா, 2011-16ல் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருந்தவர். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்தான் பதவிப் பிராமணம் செய்து வைக்க உள்ளார்.

வரும் 12ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக வரும் 13ம் தேதி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் விஜய் கோர உள்ளார்.

SCROLL FOR NEXT