எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

 
தமிழகம்

சைல்டு லைன் ஊழியர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்

வெற்றி மயிலோன்

சென்னை: “சைல்டு லைன் அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சைல்டு லைன் பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும்” என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைகள் நலனுக்கான சைல்டு லைன் (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

ஊதியம் இல்லாத நிலையில் சைல்டுலைன் பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் சைல்டு லைன் அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம். எனவே சைல்டு லைன் பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT