விஜய், அன்புமணி

 
தமிழகம்

வாழ்த்துகளை பரிமாறிய முதல்வர் விஜய் - அன்புமணி: இடைத்தேர்தல் கணக்கு பலித்ததா?

வெற்றி மயிலோன்

சென்னை: பாமக தலைவர் அன்புமணிக்கு தொலைபேசி மூலமாக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். அதே நேரத்தில், இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதற்கு முதல்வர் விஜய்க்கு அன்புமணியும் வாழ்த்து தெரிவித்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், முதல்வர் விஜய் தொலைபேசி மூலமாக அன்புமணியை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதேநேரத்தில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தவெக தலைவரும், முதல்வருமான விஜய்க்கு அன்புமணியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இரு தலைவர்களும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, அந்த தேர்தலில் தவெக வெற்றிபெற்ற பின்னர் எந்த அணியின் பக்கமும் சாயாமல் இருந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாக அவ்வப்போது சொல்லிவந்த அன்புமணி, இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று சொல்லி ஷாக் கொடுத்தார்.

கடந்த சில மாதங்களாகவே தவெக அணியில் பாமக இடம்பெறும் என்ற பேச்சுக்கள் வேகம் எடுக்கும் நிலையில், பாமகவின் இடைத்தேர்தல் புறக்கணிப்பு தவெக ஆதரவுக்கான சமிக்ஞையாக பார்க்கப்பட்டது. முக்கியமாக மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் வெற்றிக்கு பாமகவின் நிலைப்பாடே காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், இரு தலைவர்களும் தொலைபேசியில் இன்று பேசியுள்ளது பல யூகங்களை கிளப்பியுள்ளது.

SCROLL FOR NEXT