தமிழகம்

“தவெக எம்எல்ஏக்களால் சாமானியர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை பாதிப்பு” - உதயநிதி விமர்சனம்

மோகன் கணபதி

சென்னை: “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு நிலைமை மோசமடைந்துள்ள போதிலும், எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், ஸ்லீப் மோடில் இருக்கும் முதல்வர் விஜய், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், ‘சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டையும், தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி முதல்வர்?

தமிழகத்தில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.

குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழகமே பதறினால், அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.

நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல் துறை.

குற்றச் சம்பவங்களை ‘கவர் அப்’ செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி டிக்‌ஷனரியை போடலாம்.

தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்தபோது கொல்லப்பட்டார் என்று டம்மி முதல்வரும், பணியில் இல்லாதபோது கொல்லப்பட்டார் என்று காவல் துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.

மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்களின் அட்ராசிட்டியால் சாமானியர் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.

இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், ஸ்லீப் மோடில் இருக்கும் முதல்வர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT