சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் வாழ்த்துப் பெற்றார்.
சென்னை: தமிழக முதல்வர் விஜய், காதர் மொய்தீன், செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தமிழக முதல்வராக கடந்த 10-ம் தேதி பதவியேற்றார்.
அரசியல் கட்சிகளின் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க முடிவு செய்த முதல்வர் விஜய், நேற்றுமுன்தினம் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் விஜய், அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனிடம் வாழ்த்துப் பெற்றார்.
தொடர்ந்து, 2-வது நாளான நேற்று சென்னை, மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அலுவலகத்துக்கு சென்ற விஜய், அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து வாழ்த்து பெற்றார். நவாஸ்கனி எம்பி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
அப்போது, முதல்வர் விஜய் பேசுகையில், “இக்கட்டான சூழலில் எனக்கு கைக்கொடுத்து உதவியதற்கு. என்னை எப்போதும் நீங்கள் நம்பலாம்” என்றார்.
காதர் மொய்தீன் பேசுகையில், “முதல்வர் விஜய் நாகரிக அரசியல் செய்கிறார். பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடத்தின் அருகே உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது நல்ல நடவடிக்கை” என்றார்.
இதையடுத்து, முதல்வர் விஜய் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து வாழ்த்து தெரிவித்து விஜயை வரவேற்றனர்.
விசிக தலைவர் திருமாவளவனை ேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்.
அவர்களுடன் சிறிது நேரம் விஜய் உரையாற்றினார். விஜய்யுடன் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் செல்ஃபி எடுத்து கொண்டனர். இதனை தொடர்ந்து, முதல்வர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனை சந்திப்பதற்காக, வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.
வீட்டு வாசலில் காத்திருந்த திருமாவளவன், அரசிலமைப்பு சட்டத்தின் முகவுரையை வழங்கி, வாழ்த்து தெரிவித்து விஜய்யை வரவேற்றார். சிறிது நேரம் திருமாவளவனுடன் விஜய் உரையாற்றினார்.
திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நீங்கள் சந்திக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்யிடம் கேட்டு கொண்டேன். அவரும் சந்திப்பதாக தெரிவித்தார்’’ என்றார்.