சென்னை: தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்த நாளையொட்டி, தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளனர்.
முதல்வர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் ‘சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்த நாளில், அன்னாரைப் போற்றி எனது வீர வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
சமத்துவத்துக்கும், சுயமரியாதைக்கும் குரல் கொடுத்ததோடு, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்துக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது.
தியாகி இமானுவேல் சேகரன் காட்டிய வழியில், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம்’ என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘சாதி ஒழிப்புக்காகவும் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் போராடிய தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாள். இந்நாளை அரசு விழாவாகக் கொண்டாடிட ஆணை பிறப்பித்து, இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபமும் அமைத்து அவரது நினைவைப் போற்றியது நமது திராவிட மாடல் அரசு.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் பாடுபட்ட இமானுவேல் சேகரனின் வழியில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்ட உழைப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “சாதியக் கொடுமைகளுக்கும், சமூக அநீதிகளுக்கும் எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்தவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டத் தன் வாழ்நாள் முழுவதும் உறுதியுடன் போராடியவருமான தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் இன்று.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்த இமானுவேல் சேகரனின் தியாகத்தையும், சமூக நீதிக்கான அவரது போராட்டத்தையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.