காட்பாடி: தனது மேசையில் உள்ளதாக முதல்வர் விஜய் கூறும் அந்த 3 பைல்களை அவர் ஒரு வாரத்துக்குள் திறக்க வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘வரும் நாட்களில் திமுக சட்டப்பேரவைக்கு வராது, அவர்களால் தேர்தலில் இனி வெல்ல முடியாது என தவெக உறுப்பினர்கள் பேரவையில் பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்குப் பின் யாரும் வர மாட்டார்கள் என்று தான் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கூறினார்கள். ஆனால், நாங்கள் அவர்களையும் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளோம். நாங்களும் இப்படி கூறினோம். எங்களையும் அவர்கள் தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளார்கள். இதெல்லாம் அரசியல் ஞானத்தோடு சொல்லும் சொல் அல்ல.
ஊரான் வீட்டு நெய்யில் யாருக்கு ஸ்வீட் செய்கிறீர்கள் என்றும், எதற்கெடுத்தாலும் நிதி இது இல்லை என சொல்வதற்கு நீங்கள் எதற்கு என்றும் தேர்தல் பிரசாரத்தின்போது தவெக தலைவர் விஜய் பேசினார். தற்போது எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்க இருப்பதாக அவர் பேசியுள்ளார். அந்த செய்தியை பார்த்தவுடன் நான் கூட பரவாயில்லை என முதலில் நினைத்தேன்.
ஆனால் அதற்குப் பிறகு பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்த்த பிறகு, கார் இல்லாதவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளார்கள் என்பதையும், கார் வேண்டும் என கேட்டவர்களுக்கே மூன்று கார்கள் உள்ளன என்பதையும் தெரிந்து கொண்டேன்.
கார் வைத்துள்ளவர்களுக்கு கார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மக்களின் கருத்து. திமுகவைப் பொறுத்தவரை கார் இருக்கோ இல்லையோ, எங்களுக்கு வேண்டாம் என சொல்லிவிட்டோம்.
நிதி இல்லை, கஜானாவை காலியாக வைத்து விட்டார்கள் என்பது தானே முதல்வரின் குற்றச்சாட்டாக இருந்தது. பிறகு எப்படி கார் கொடுக்க முடியும்? எப்படி ஓட்டுநருக்கு சம்பளம் கொடுக்க முடியும்?
கார் ஓட்டுநருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். ஆனால் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது நியாயம் தானே.
சட்டப்பேரவையில் சபாநாயகர் உள்பட தவெக எம்எல்ஏக்கள் பலர் பாட்டு பாடுவது, கேலி கிண்டல் செய்வதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. சபாநாயகர் நீண்ட நாட்கள் பேரவையில் இருந்தவர். அவர் ஓரளவுக்கு அவையை நடத்துகிறார்.
தவெக உறுப்பினர்களுக்கு மரபும், சட்டமும் தெரியவில்லை. சட்டப்பேரவைக்கு சென்ற உடன் முதலில் விதிகள் அடங்கிய புத்தகம் கொடுப்பார்கள். அதை கொடுத்தார்களா, இவர்கள் படித்தார்களா என தெரியவில்லை.
முதல்வர் விஜய், தனது மேசையில் மூன்று பைல்கள் உள்ளன என்றும், அவற்றை திறக்கும்படி வைத்துவிடாதீர்கள் என்றும், அவற்றை எப்போது, எப்படி திறக்க வேண்டும் என்பது தனக்குத் தெரியும் என்றும் கூறி இருக்கிறார்.
முதலவரின் இந்த பேச்சுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சவால் விடுத்துள்ளார். தைரியம் இருந்தால் அந்த கோப்புகளை திறங்கள், யார் மீது குற்றம் இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். அதை விட்டுவிட்டு ஊரில் வித்தைக்காரன் காட்டுவது போல் வித்தைக் காட்டக்கூடாது என்று கூறியுள்ளார்.
முதல்வர் எங்களைத் தானே சொல்கிறார். நாங்களே அனுமதி கொடுத்த பிறகு அந்த கோப்புகளை திறக்க வேண்டியதுதானே. திறக்கவில்லை என்றால் தவறான தகவலை முதல்வர் சபைக்குச் சொல்கிறார் என்று அர்த்தம்.
அந்த கோப்புகளை திறக்கச் சொல்லி எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும். ஒரு வாரத்திற்குள் அவற்றை திறக்க வேண்டும். இல்லையென்றால் சபைக்கு முதல்வர் விஜய் தவறான தகவலை கொடுத்தார் என முறையிட வேண்டும்.
என்னுடைய 50 ஆண்டுகால சட்டப்பேரவை வரலாற்றில் மாமன் மச்சான் என யாரும் கூப்பிட்டு பார்த்ததில்லை. எதிரி என்றால் எதிரியாகத்தான் இருக்க வேண்டும். சபைக்குள் மாமன் மச்சான் உறவு என்ன வேண்டியிருக்கு? அண்ணன் என்னடா தம்பி என்னடா அரசியல் உலகத்தில் என்பது தான் எனது கேள்வி. நான் அப்படித்தான் இருந்தேன்.
என்னை வளர்த்து, படிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர். அவர், என்னை கூப்பிட்டு 'அதிமுகவுக்கு வா அமைச்சரவையில் இடம் கொடுக்கிறேன்' என்று சொன்னார். அப்போது நான் எனது கட்சி திமுக-தான் என்று சொன்னதற்கு, உனது உறுதியை பாராட்டுகிறேன் என்றார். அப்பேற்பட்ட எம்ஜிஆரிடமே சட்டப்பேரவையில் நேருக்கு நேர் பேசியவன் நான்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், எதிர்க்கட்சிக்காரன் வாளோடு சபைக்கு செல்ல வேண்டும். ஆளும் கட்சிக்காரன் கேடயத்தோடு செல்ல வேண்டும். இவன் சுழற்றுவான். அவன் தடுக்க வேண்டும். தடுக்க முடிந்தால் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சலாம் போட்டு விட்டு செல்ல வேண்டும். இது தான் சட்டப்பேரவை. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.