புது டெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற விஜய், மே 27-ம் தேதி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்த முதல்வர் விஜய், தமிழகத்துக்குத் தரவேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், 2-வது முறையாக 3 நாள் பயணமாக முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை (ஜூன் 11) நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் விஜய், கூட்டம் முடிந்த பின்னர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தமிழக முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார்.