தமிழகம்

பெரியார் திடலில் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழா மேடையிலேயே 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம், சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப் படை, போதைப் பொருள் தடுப்புப் படை ஆகிய 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதன்பின்னர் சென்னை தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கு முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அலுவல்களை தொடங்கினார். முன்னதாக காவல்துறை அளித்த மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து சென்னையில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார். அப்போது கி.வீரமணிக்கு சால்வை அணிவித்து முதல்வர் விஜய் சிறப்பு செய்தார். கி.வீரமணியும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு செய்தார். இதன் பின்னர் கி.வீரமணியுடன் உரையாடிய முதல்வர் விஜய், பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT