அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் விஜய் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதிகள் இணைப்பு, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக விஜய், ஆந்திர மாநிலத்துக்கு சென்றுள்ளார். இதற்காக அவர் இன்று பிற்பகல் சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக விஜயவாடாவுக்கு சென்றார். 3.45 மணியளவில் விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், அங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையில் உள்ள கனக துர்கா கோயிலுக்கு சென்றார்.
கனக துர்கா கோயிலில் மேளதாளங்கள் முழங்க முதல்வர் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அந்தக் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டார். கோயிலுக்குச் செல்லும் வழியிலும், கோயிலிலும் ஏராளமானோர் முதல்வர் விஜய்யை உற்சாகமாக வரவேற்றனர்.
கோயிலில் இருந்து புறப்பட்ட தமிழக முதல்வர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது ஆந்திர அமைச்சரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நர லோகேஷ் உடனிருந்தார். மேலும், ஆந்திர அமைச்சர்கள் நாராயணா மற்றும் நிம்மல ராமநாயுடு ஆகியோரும், தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது கோதாவரி - கிருஷ்ணா - காவிரி ஆகிய நதிகள் இணைப்புத் திட்டம், நெல்லூரில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடுவது ஆகியன குறித்து ஆந்திர முதல்வரிடம் தமிழக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.