தமிழகம்

நீர்நிலைகளை மீட்க ‘ஏரி’ இணையதளம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான “ஏரி” இணையதளத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல்வர் விஜய் இன்று (10.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "ஏரி" இணையதளத்தைத் (https://eri.tn.gov.in) தொடங்கி வைத்தார். மேலும், நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அரசுசாரா அமைப்புகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியுதவியுடன் நீர்நிலைகளைப் புனரமைக்க விரும்பும் அரசுசாரா அமைப்புகளும், தன்னார்வலர்களும் பல்வேறு அரசுத் துறைகளிடம் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களையுமாறு முதல்வர் விஜய்யிடம் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், நீர்நிலைகளைப் புனரமைக்க எளிமையான முறையில் தடையின்மைச் சான்றிதழ் வழங்குவதற்காக நீர்வளத் துறையால் “ஏரி” இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளின் விவரங்கள் இந்த ஒரே இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. நீர்நிலைகளைத் தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல், அனுமதிக்கப்பட்ட சிறிய மேம்பாட்டுப் பணிகளைச் செய்தல் ஆகியவற்றுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதனால், நீர்நிலைகளின் நீர்சேமிப்புத் திறனும், செயல்பாடும் மேம்படும்.

தற்போதுள்ள நேரடி விண்ணப்ப முறைக்குப் பதிலாக, இணையதளத்தின் மூலம் வெளிப்படையான, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. தகுதியான விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்குவதே இதன் இலக்காகும். டிஜிட்டல் தொழில்நுட்பம், சிஎஸ்ஆர் நிதி மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் இம்முயற்சி, நீர்நிலைகளைப் புனரமைப்பதில் அதிகமானோர் பங்கேற்க வழிவகுக்கும். மேலும், மாநில நீர்வள மேலாண்மை முகமையின் (SWaRMA) தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர், விண்ணப்பப் பரிசீலனை, ஒப்புதல் கண்காணிப்பு, துறைகளுடனான ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக சிறுதுளி (Siruthuli), இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Environmental Foundation of India), எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை (Exnora International Foundation), மெகா அறக்கட்டளை (Mega Foundation) மற்றும் தானம் அறக்கட்டளை (Dhan Foundation) ஆகிய அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முதல்வர் இன்று தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சீ.ரமேஷ், வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT