சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், மே 27-ம் தேதி டெல்லி சென்று வந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு, மேகேதாட்டு அணையை அனுமதிக்கக்கூடாது என்பன உட்பட 4 அம்சக் கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம், அவர் முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அன்று இரவே சந்தித்துப் பேசினார். இந்தப் பயணத்தின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் சந்திப்பை மேற்கொள்ளாமலேயே சென்னை திரும்பினார். இந்நிலையில் மாநில முன்னேற்றத்துக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் டெல்லியில் ஜூன் 11-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், ஜூன் 11-ம் தேதி டெல்லிசெல்கிறார். இந்தப் பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.