தமிழகம்

69 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்வர் விஜய் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: வேளாண் - தோட்டக்கலை துறைக்குத் தேர்வான 69 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறையின் திட்டங்களைக் கள அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக, டிஎன்பிஎஸ்சி மூலம் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 26 உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் 43 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 69 நபர்களுக்கு முதல்வர் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வழங்கிய தேசிய அளவிலான விருதுகளைப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள், முதல்வரைச் சந்தித்துத் தங்களது விருதுகளைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதில் 2024-2025-ம் ஆண்டுக்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையும், அதே ஆண்டுக்கான சமூகப் பொறுப்புக்கான விருதை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையும் பெற்றுள்ளது.

மேலும், 2025-2026-ம் ஆண்டிற்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையும், சிறந்த செயல்திறனுக்கான சர்க்கரை ஆலைக்கான விருதை கள்ளக்குறிச்சி-II கூட்டுறவு சர்க்கரை ஆலையும் வென்றுள்ளன.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வேளாண்மை - உழவர்நலத் துறை அமைச்சர் வினோத், தலைமைச் செயலர் சாய்குமார், வேளாண்மை துறை செயலர் வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT