கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நட்சத்திர ஏரியின் அழகை ரசித்தபடி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.26) காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் வந்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாகத்துடன் முதல்வரை வரவேற்றனர்.
கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்தினருடன் முதல்வர் தங்கியுள்ளார். விடுதியில் கட்சியினர் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை விடுதியில் இருந்து வெளியே வந்த முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா மற்றும் உறவினர்களுடன், கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் நலம் விசாரித்த முதல்வர், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஏரி பகுதியில் தூய்மை பணி மேற்கொண்ட தூய்மை பணியாளர்களிடம், கலந்துரையாடிய முதல்வர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஒரு மணி நேர நடைபயிற்சிக்குப் பிறகு முதல்வர் மீண்டும் தங்கும் விடுதிக்கு சென்றார். இன்று (ஏப்.26) முழுவதும் அறையில் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 29-ம் தேதி வரை ஓய்வெடுக்கும் முதல்வர் ஏப்ரல் 30-ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளார். எனவே, ஏப்ரல் 30 வரை கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன் கேமரா) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.