சென்னை பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி.
சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சிஎம்டிஏ சார்பில் ரூ.1.61 கோடி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.40.59 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையோரப் பூங்கா, ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 2 அமுதம் நியாய விலைக் கடைகள், ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன பயணியர் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கல்லூரி கட்டிடம் திறப்பு: இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.31.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அறநிலையத் துறை சார்பாக, கல்வி எனும் அறப்பணிக்கு இந்தக் கல்லூரி ஒரு சாட்சியாக இருக்கிறது.
மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, கல்வி தான் கடவுள், கல்வி எனும் கடவுள் உங்களுக்கு எல்லாவற்றையும் வழங்கும். படிப்புதான் உங்களை உயர்த்தும். இன்று இந்தியா முழுவதும் பின்பற்றும் மாடலாக திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் மாடல் தொகுதியாக இருப்பது கொளத்தூர்.
ஏதோ தேர்தல் வரும்போது மட்டும் ஒன்றிரண்டு திட்டங்களை திறந்து வைக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும் வந்து, உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம். இந்தக் கல்லூரியை திறந்து சில ஆண்டுகளிலேயே 516 மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வாகி பல்வேறு வேலைவாய்ப்புகள் பெற்றிருக்கின்றனர்.
இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும். இது கொளத்தூருக்கு மட்டுமல்ல. இதேபோல தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு ஊரிலும், இதுவரை நடக்காத அளவுக்கு முன்னேற்றப் பணிகளைச் செய்திருக்கிறோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும், எங்கும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
மக்களை மையப்படுத்தி, மக்களைத் தேடி வந்து சேவைகளை வழங்குகின்ற மக்களாட்சியாக திராவிட மாடல் பெயரெடுத்திருக்கிறது. இந்த நல்லாட்சி தொடர, நம்முடைய கொளத்தூர் மேலும், மேலும் உயர, உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஸ், மேயர் ஆர்.பிரியா, வருவாய்த் துறை செயலர் பெ.அமுதா, வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா, அறநிலையத் துறை செயலர் மணிவாசன், பள்ளிக்கல்வி செயலர் சந்திரமோகன், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், அறநிலையத் துறை ஆணையர் தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.