மதுரை: கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் தீப விவகாரம் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில், ‘‘மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா அல்லது அரசியலா? என மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள். இவைகள்தான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடையே வரவேற்பு கிடைத்தாலும், திமுக ஆட்சிக்கு வந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் மற்ற நகரங்களை போல் மதுரையில் வேலைவாய்ப்புகளை தரும் திட்டங்களை தொடங்கவில்லை என்றும், முதல்வரின் பட்டியலில் மதுரை விமான நிலையம் ஏன் இடம் பெறவில்லை என்றும் மதுரையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் சமூக வலைதளத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்குழும நிர்வாகி டாக்டர் ஜெ.மகேந்திரவர்மன் கூறியதாவது: கடந்த காலத்தில் தொழில் முதலீடுகளும், தொழிற்சாலைகளும், சென்னை, காஞ்சிபுரம் போன்ற நகரங்களை சுற்றியே வந்து கொண்டிருந்தன. தற்போதைய திமுக ஆட்சியில் தூத்துக்குடி, ஓசூர், திருச்சி போன்ற மற்ற நகரங்களுக்கும் தொழில் முதலீடுகளும், மற்ற கட்டமைப்பு வசதிகளும், வேலைவாய்ப்பு திட்டங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ஆனால் இந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் புதிதாக வேலைவாய்ப்பு திட்டங்கள், உற்பத்தி நிறுவனங்களை மதுரைக்கு கொண்டு வரவில்லை. இதே கருத்து கடந்த ஆண்டு சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் கலைஞர் நூலகமும், ஜல்லிக்கட்டு மைதானமும் கட்டி யதையே பெரும் சாதனையாக கூறுகின்றனர். இவை நல்ல திட்டங்கள்தான் என்றாலும் பெரிய அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தாது. திமுக ஆட்சியில் ஆரம்பத்தில் அறிவித்த டைடல் பார்க் திட்டம் தற்போதுதான் கட்டுமானப் பணி தொடங்கி நடக்கிறது. செயல் படும்போதுதான் வேலைவாய்ப்பு கிடைக்கும் விவரம் தெரியவரும்.
விமான நிலைய விரிவாக்கம் மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்கள் 2 வாரங்களில் கையகப்படுத்தி ஒப்படைக்கப்படும் என முன்பு நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் மட்டுமின்றி தமிழக அரசும் உறுதி அளித்தது. இதுவரை முழுமை பெறவில்லை. அதுபோல் எய்ம்ஸ் திமுக ஆட்சிக்கு வந்ததும் தொடங்கப்பட்டுவிடும் என்று பிரச்சாரத்துக்கு மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். ஆனால், தற்போது வரை கட்டுமானப் பணிதான் நடக்கிறது.
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் போதுமான விவரங்களை வழங்கவில்லை, என்று மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. மதுரையின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் முக்கியமான இந்த 3 திட்டங்களிலும் மத்திய, மாநில அரசுகள் ஒருவரையொருவர் குறை சொல்லியே கடந்த நான்கரை ஆண்டுகளை போக்கி விட்டனர்.
அதுபோல் மதுரை மாநகரைத் தாண்டி, புறநகர், கிராமங்களிலும் சாலை வசதி இன்னும் மேம்பாடு அடையவில்லை. மாநகரின் சாலை திட்டங்களை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் இல்லை. இப்படி மதுரை மாநகரில் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகள் பல இருக்கின்றன. மதுரைக்கு புதிய ரயில் வழித்தடங்களை கேட்டுப் பெற முடியவில்லை.
குட்லாடம்பட்டி அருவியில் சாதாரண சீரமைப்பு பணிகளைச் செய்ய 8 ஆண்டுகளாக அரசால் முடியவில்லை. இவையெல்லாம் அரசியல் கட்சிகளுக்கும், மக்கள் பிரதி நிதிகளுக்கும் தெரியவில்லையா? இந்த கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டங்களை மேற்கொள்ளவோ, குரல் கொடுக்கவோ யாரும் முன்வரவில்லை.
மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தாமல் விமான நிலையத்துக்கு பெயர் சூட்டும் அரசியல், சிலை திறப்பு அரசியல், சாதி, மதம், கோயில் சார்ந்த அரசியல் பிரச்சினைகளை எழுப்பி குளிர்காய்கின்றனர். மதுரை என்றாலே அரசியல் மாநாட் டுக்கும், சினிமா எடுப்பதற்கும்தான் என்று நினைக்கின்றனர். இன்னும் எத்தனை காலம்தான் மதுரை மக்கள் உண்மை யான வளர்ச்சிக்காக ஏங்கி கிடக்க வேண்டும் என்பது தெரிய வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.