காரைக்குடி: காவல் மரணம் குறித்து முதல்வர் விஜய் கருத்து தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியது: “நிலமற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பொதுவுடமை, மதசார்பின்மை, பன்முகத் தன்மை ஆகியவற்றை பாதுகாக்கவும், தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றவும் வலியுறுத்தி இந்தியா முழுவதும் 10 நாட்கள் நடைபயண இயக்கத்தை நடத்துகிறோம்.
செப்டம்பர் 1-ம் தேதி புது டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். ஈரான் மீது அமெரிக்கா அடாவடித்தனமாக யுத்தம் தொடுத்துள்ளது. உலகம் மீண்டும் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகிறது.
வளைகுடா நாடுகள் மட்டுமின்றி, உலகத்தையே அமெரிக்கா பதற்றத்துக்கு உள்ளாக்கி வருகிறது. இதை மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரான மோடி பார்வையாளராக பார்த்து கொண்டிருக்க கூடாது. அமெரிக்க அதிபரை கண்டிக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
காவல் மரணங்கள் ஏற்படுவதை ஏற்க முடியாது. விசாரணைக்கு உத்தரவிட்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இது குறித்து முதல்வர் கருத்து சொல்ல வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்ட கூடாது. தமிழர்களின் உரிமையை பறிக்க கூடாது. 2 மாநிலங்களின் நல்லுறவைக் கெடுக்கிற செயலை கர்நாடக அரசு செய்கிறது.
இந்த தேசத்தின் இயற்கை வளங்களை முதலாளிகள் தான் அபகரிக்கின்றனர். இயற்கை வளங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும். அதை சூறையாடுவதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும். எங்களுக்கு நாடு முழுவதும் அமைப்பு இருக்கிறது, தலைவர்கள் இருக்கின்றனர். உழைக்கும் மக்கள் இருக்கின்றனர். எங்களுக்கான சூழல் வரும்போது தனித்து தேர்தலில் களம் காண்போம்.
மக்களின் தீர்ப்பை மதித்து தவெக அரசுக்கு ஆதரவளிக்கிறோம். இந்த அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம். தவறிழைத்தால் எதிர்ப்போம். முதலாளித்துவ சமுதாய அமைப்பே லஞ்சம், ஊழலின் ஊற்றுக்கண். 40 பேர் உழைப்பதை 4 பேர் உறிஞ்சுகின்றனர். அதை நமது சட்டமும், நீதிமன்றமும் வேடிக்கை பார்க்கிறது. ஊழலில்லாத சமூகத்தை நாங்கள் உருவாக்குவோம்.
நாடு சோசலிசம், இடது சிந்தனையை நோக்கி நகர வேண்டும். குதிரை பேரம் ஏற்புடையது அல்ல. இது ஜனநாயகத்துக்கு ஏற்படுகின்ற இழுக்கு. குற்றங்கள் குறைய ஆட்சி, கட்சி, தலைவர்கள் மாறுவதால் மட்டுமல்ல; அடிப்படையில் சமூகம் மாற வேண்டும். எங்களிடம் முதல்வரா? தூய்மைப் பணியாளரா? என்று கேட்டால் நாங்கள் தூய்மைப் பணியாளர் பக்கம் தான் நிற்போம்.
தனியார்மயம் என்பது நல்லதல்ல. என்எல்சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்கிறது. அதை நாங்கள் பாதுகாக்க போராடுகிறோம். என்எல்சி பங்குகளை விற்றால், தமிழக அரசே வாங்க வேண்டும். என்எல்சி தொடர்பாக முதல்வர் எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.