எடப்பாடி பழனிசாமி

 
தமிழகம்

“மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தை ‘மாற்றி’ அறிவித்து ஏமாற்றிய ஸ்டாலின்” - இபிஎஸ் விமர்சனம்

வெற்றி மயிலோன்

சென்னை: பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது இந்த திமுக அரசு.

'ஒன்றிய அரசு, குன்றிய அரசு' என்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்' (Unified Pension Scheme) பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.

பழைய ஒய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும், அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும், பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின். இச்செயல் 'புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது.

உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். அதற்கு வரும் தேர்தலில் திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT