சென்னை: ‘‘நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்கவாதிகள், வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என்று யாரும் இந்த ஆலமரத்தை (திமுகவை) அசைத்துப் பார்க்க முடியாது” என்று திருமாவேலன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ப.திருமாவேலன் எழுதிய ‘தீரர்கள் கோட்டம் திமுக’, ‘திராவிட அரசியல் - திராவிட அரசு இயல்’, ‘முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர்’ ஆகிய மூன்று நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இவ் விழாவில் முதல்வர் பேசியதாவது: அரசியல் புரட்சியின் அடையாளமாக, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகின்ற கருத்தியல் தெளிவின் அடையாளமாக, திராவிட இயக்கம் இருக்கும் காரணத்தால்தான், ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும், திராவிடம் என்றாலும், திராவிட இயக்கங்கள் என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலும் கசக்கிறது. மிகவும் எரிகிறது.
ஒடுக்கப்பட்டவர்கள் மேலெழுந்து வருகிறார்கள் என்றதுமே, எவ்வளவு வன்மம் வெளியே வருகிறது. வரலாற்றை சிறிது திரும்பிப் பார்த்தோம் என்றால், விமர்சனங்கள் என்ற பெயரில், எத்தனை அவதூறுகள், எவ்வளவு காழ்ப்புணர்வு.. அந்தக் காலத்தில், “நீதிக்கட்சியை குழிதோண்டி புதைப்பேன்” என்று ஒருவர் சொன்னார்.
ஆனால், இன்றைக்கு நிலைமை என்ன? நூறாண்டுகள் கழித்தும், நீதிக்கட்சியின் நீட்சியாக நாம், தமிழக மக்களுடைய ஆதரவுடன், மக்க ளுக்கான பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நாம் திராவிட மாடல் என்று சொல்ல, சொல்ல அவர்களுக்கு திரும்ப, திரும்ப எரிகிறது. அவர்களுக்கு திரும்ப, திரும்ப எரியவேண்டும் என்றுதான், நாமும் திரும்ப, திரும்ப திராவிட மாடல் என்று சொல்கிறோம்.
நூறாண்டுகளுக்கு முன்பு, தமிழகம் எப்படி இருந்தது; இன்று எப்படி இருக்கிறது. இதே காலகட்டத்தில், நாட்டின் பிற மாநிலங்கள் அடைந்திருக்கும் சமூக வளர்ச்சி - பொருளாதார வளர்ச்சி - உட்கட்டமைப்பு வளர்ச்சி என்ன? மற்ற எல்லோரையும் விட, அனைத்து வகையிலும் நாம் இருபது ஆண்டுகள் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். சிலர் ‘திராவிட மாடல் என்றால் என்ன?’ என்று கேட்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம், பதில் சொல்லும் வகையில் திருமாவேலன் இந்த புத்தகங்களை எழுதியுள்ளார்.
திமுகவுக்கு சொகுசு கிடையாது: அரசியலில், பலரும் சொகுசை எதிர்பார்த்து வருவார்கள். ஆனால், திமுகவுக்கு அந்த சொகுசு கிடையாது. சில இயக்கங்களைப் பார்த்தீர்கள் என்றால், சிறிய எஃப்.ஐ.ஆர். பதிவானாலே, கட்சிவிட்டு கட்சி தாவுவார்கள்.
ஆனால், கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொண்டு, அவதூறுகளையும், பழிச்சொற்களையும், வன்மத்தையும் தாங்கி, கருப்பு, சிவப்புதான் உயிர்மூச்சு, அண்ணாவும், கலைஞரும் சொன்ன கொள்கைகள்தான் கட்டளை என்று லட்சியத்துக்காக வாழ்கின்றவர்கள்தான், திமுக உடன்பிறப்புகள்.
இன்று முப்பது செகண்ட்ஸ் ரீல்ஸ் வீடியோவை கூட முழுவதும் பார்க்காமல் ஸ்கிப் செய்கின்ற அளவுக்கெல்லாம் வேகமாக சென்று கொண்டிருக் கிறது! இந்த Addiction-னால் எந்த விஷயத்திலும், ஆழ்ந்து கவனம் செலுத்த முடியாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், புத்தக வாசிப்புதான் மனதை ஒருமுகப்படுத்துகின்ற மெடிட்டேஷன்.
ஒரு நாளைக்கு அரை மணி நேரம்,அல்லது 15 நிமிடமாவது புத்தகங்களை வாசியுங்கள். நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்கவாதிகள், வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என யாரும் இந்த ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியாது.
இங்கே அறிவுத்தீ அணையாமல் இருப்பதால்தான் நம்முடைய ஊரில், கலவரத்தீயை பற்ற வைக்க முடியவில்லை. திராவிடம் எனும் அறிவொளி இயக்கத்தால் நிமிர்ந்த தமிழகம் ஒருநாளும் தலைகுனியாது. பாசிசவாதிகளின் பகல்கனவு இங்கு பலிக்காது. இவ்வாறு முதல்வர் பேசி னார்.