தமிழகம்

தமிழகம் முழுவதும் 583 தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனம்: மின்வாரியம்

மணிகண்டன்

சென்னை: தமிழகம் முழுவதும் 583 தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமித்து மின்வாரிய தலைமைப் பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 583 மின்சாரப் பிரிவு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணையை மின்வாரிய தலைமைப் பொறியாளர் எம்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வறிக்கையின்படி இந்த தற்காலிகத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 583 பேரில், 9 மாற்றுத்திறனாளிகள், 134 பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் 10 ஆதரவற்ற கணவரை இழந்தோர் ஆகியோரின் அடங்கியுள்ளனர்.

மேலும், பணி நியமன ஆணை கிடைக்கப் பெற்ற 3 மாதங்களுக்குள் பணியில் சேரத் தவறினால், அவர்களின் வேலைவாய்ப்பு உரிமை ரத்து செய்யப்பட்டு தேர்வுப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட அனைவரும் கண்டிப்பாகப் பிரிவு அலுவலகங்கள் தவிர்த்த இதர மின்வாரிய அலுவலகங்களில் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என மண்டல கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு தலைமைப் பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

கிடப்பில் இருந்த தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆணையை வெளிப்படை தன்மையுடன் பூர்த்தி செய்த முதல்வருக்கும், மின் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கும் மின்வாரியத்தின் தவெக அணி நன்றி தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT