அர்ச்​சனா பட்​நாயக்

 
தமிழகம்

9 நாட்களில் ரூ.179 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய தேர்​தல் ஆணை​யம் மார்ச் 15-ம் தேதி பொதுத்​தேர்​தல் அறி​விப்பை வெளி​யிட்​டதும் தேர்​தல் நடத்தை விதி​கள் உடனடி​யாக அமலுக்கு வந்​துள்​ளன.

இவை தமிழகத்​தில் உள்ள 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும் தீவிர​மாகச் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. நேற்று வரை, பொது இடங்​களில் இருந்த 4,54,321 சுவர் விளம்​பரங்​கள், தனி​யார் இடங்​களில் இருந்த 2,56,041 விளம்​பரங்​கள் அகற்​றப்​பட்​டு, 544 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

          

தேர்​தல் நடத்தை விதி​களைத் தீவிர​மாகக் கடைபிடிக்​க​வும், தேர்​தல் விதி​மீறல்​களைத் தடுக்​க​வும் தமிழகம் முழு​வதும் மொத்​தம் 2,169 பறக்​கும் படை குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும் சி விஜில் செயலி மற்​றும் பிற வழிகள் மூலம் பெறப்​படும் புகார்​கள் மீது உடனுக்​குடன் நடவடிக்கை எடுக்​கப்​படு​கின்​றன. முக்​கிய இடங்​கள் மற்​றும் சோதனைச் சாவடிகளில் மொத்​தம் 2,166 நிலை​யான கண்​காணிப்​புக் குழுக்​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ளன.

பறக்​கும்​படை, நிலை கண்​காணிப்​புக் குழுக்​கள் நடவடிக்​கை​யில் இதுவரை, ரூ.34.64 கோடி ரொக்​கம், ரூ.79 லட்​சம் மதிப்​பிலான மது​பானம், ரூ.6.76 கோடி மதிப்​பிலான போதைப்​பொருட்​கள், ரூ.112.37 கோடி மதிப்​பிலான தங்​கம், வைரம், ரூ.24.22 கோடி மதிப்​பிலான பரிசுப் பொருட்​கள் மற்​றும் இதர பொருட்​கள் என ரூ.178.78 கோடி மதிப்​பில் பணம் மற்​றும் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

ஏப்​.9-ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்​. 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்​குப்​ப​திவுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​களை நடத்​து​வது மற்​றும் அதனை அச்சு ஊடகம் அல்​லது மின்​னணு ஊடகம் வாயி​லாக வெளி​யிடு​வது அல்​லது வேறு ஏதேனும் முறை​யில் பரப்​புவது தடை செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT