கோப்புப் படம்
சென்னை: பருவநிலை மாற்றத்தால் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பை தொடர்ந்து சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
குளிர்காலம் முடிந்து வெயில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் அரசுகண் மருத்துவமனை உட்பட தனியார் மருத்துவமனைகளுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மற்றொரு புறம், சின்னம்மை, மம்ப்ஸ்என்ற பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
சின்னம்மை நோய் எளிதில் பரவும் வைரஸ் தொற்று ஆகும். இது காய்ச்சல், சோர்வு, தளர்ச்சி,பசியின்மை ஆகிய அறிகுறிகளுடன் தொடங்கி, பிறகு உடலில் சிறிய நீர் திவளைகள் போன்ற கொப்புளங்களுடன் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல் பொன்னுக்கு வீங்கி பாதிப்பால், கன்னப்பகுதிக்குக் கீழே, கழுத்தின் ஒரு புறத்திலோ, இரு புறங்களிலுமோ வீக்கம் ஏற்படும்.
இது தொடர்பாக அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, “சின்னம்மையை பொருத்தவரையில், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு தீவிர பாதிப்பு ஏற்படுத்தும். பொன்னுக்கு வீங்கி, கணையத்தை தாக்கி அதீத வயிற்று வலி ஏற்படுத்தும். பெண் குழந்தைகளுக்கு, சினைப்பையை தாக்கி அழற்சியை ஏற்படுத்துவதுடன், அடிவயிற்றுப் பகுதியில் தீவிர வலியை ஏற்படுத்தும்.
ஆண்களின் விந்தணு உற்பத்தி உறுப்பில் அழற்சியை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும். கழுத்துப் பகுதி இறுக்கம், அதிக தலைவலியை ஏற்படுத்தலாம். இருமல், தும்மல் மூலமாக மற்றவர்களுக்கும் பரவும் என்பதால், பொது இடங்கள், பள்ளிகள் போன்றவற்றில், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள், ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர்.