தமிழகம்

அக்.10ல் புதுச்சேரியில் ராமகிருஷ்ண மடம் திறப்பு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ராமகிருஷ்ண மடம் வரும் அக்.10ல் கருவடிக்குப்பத்தில் திறக்கப்படுகிறது. ஆன்மீகத்துடன், மருத்துவம், கணினி பயிற்சி உள்பட பல சேவைகள் வழங்கப்பட உள்ளன.

ராமகிருஷ்ண மடத்தின் புதுச்சேரி பொறுப்பாளர் சுவாமி நித்தேஷானந்தா, சென்னை மேலாளர் ரகு நாயக நந்தா ஆகியோர் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது, “தன் முக்திக்காகவும், உலக நன்மைக்காகவும் ராமகிருஷ்ண மடத்தின் சேவைப் பணிகள் 140 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

கருவடிக்குப்பத்தில் 18,609 சதுர அடியில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை மடம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ராமகிருஷ்ணர் கோயில், அன்னை சாரதா இல்லம், சேவை மைய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் நன்கொடையால் இவற்றை அமைத்துள்ளோம்.

கோயிலில் தினமும் காலை மங்களாரத்தி, மாலை ஆரத்தி, பூஜைகள், வேத மந்திர உச்சாடனம், ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கும். அன்னை சாரதா இல்லத்தில் சாதுக்கள் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத் தளத்தில் சமையலறை, உணவருந்தும் அறைகள் உள்ளன. சேவை மைய கட்டிடத்தில் மருத்துவ சேவையகம் முதல் மற்றும் 2-ம் தளத்தில் அமைந்துள்ளது.

அங்கு இலவச மருத்துவ ஆலோசனை, ரத்த மாதிரி சேகரிப்பு, டிரெஸ்ஸிங், சித்த மருத்துவ அறை, கண் மருத்துவ அறை, ஆய்வகம், பல் மருத்துவம், பிசியோதெரபி, எக்ஸ்ரே சேவைகள் உண்டு. மூன்றாவது தளத்தில் சுவாமி விவேகானந்தர் ஒழுக்கம், மனித வள மேம்பாட்டு மையம், கணினி பயிற்சி, நெறி வளர்ச்சி வகுப்புகள், இலவச நூலகம் உள்ளன.

வரும் அக்.9ம் தேதி வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம் நடைபெறும். இந்நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்கிறார்.

வரும் அக்.10ம் தேதி காலை ராமகிருஷ்ணர் கோயிலை ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகாராஜ் திறந்து வைக்கிறார். சேவை மையக் கட்டடத்தை மாலை முதல்வர் ரங்கசாமி திறந்து வைக்கிறார். நிலம், கட்டடம் கட்டுமானம் ஆகியவற்றுக்கு ரூ.20 கோடி வரை நன்கொடையால் பணிகள் நடந்தது” என்றனர்.

SCROLL FOR NEXT