சென்னை துறைமுகத்தில் அதிநவீன பயணிகள் முனையம் நேற்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,800 பயணிகளுடன் துறைமுகத்துக்கு வந்தடைந்த ‘எம்.வி. எம்பிரஸ்’ சொகுசுக் கப்பல்.படம்: பிடிஐ
சென்னை: சென்னை துறைமுகத்தில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் அதிநவீன சொகுசு கப்பல் பயணிகள் முனையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,800 பேருடன் வந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் முதன்மை நுழைவுவாயிலாக விளங்கும் சென்னை துறைமுகத்தில், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 3 மாத காலத்துக்கான சொகுசு கப்பல் சுற்றுலா சீசன் தொடங்கியுள்ளது. இதையொட்டி, சென்னை துறைமுகத்தின் மேற்கு பகுதியில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் அதிநவீன சொகுசு பயண கப்பல் பயணிகள் முனையம், நேற்று பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த முனையம் 4,103 சதுர மீட்டர் பரப்பளவுடன், ஒரு மணி நேரத்துக்கு 800 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. இதில் முழுமையான குளிரூட்டப்பட்ட வசதி, சுங்கத் துறை மற்றும் குடியுரிமை சோதனைகளுக்கான ஒருங்கிணைந்த ஒற்றைச்சாளர வசதி, அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள், லக்கேஜ் ஸ்கேனர்கள், நவீன ஓய்வறைகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் சிற்றுண்டிச் சாலை என உலகத்தரம் வாய்ந்த பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன.
சுற்றுலா சீசன் தொடங்கியதை அடுத்து, சென்னை துறைமுகத்துக்கு தனியார் நிறுவனத்தின் ‘எம்.வி.எம்பிரஸ்’ சொகுசு கப்பல் 1,800 பயணிகளுடன் நேற்று வந்தடைந்தது. கப்பலில் இருந்து இறங்கிய சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு, தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், இசை நிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணிகளுக்கு திலகமிடப்பட்டு, மலர்க் கொத்து மற்றும் வரவேற்பு பானங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த நவீன சர்வதேச சொகுசு கப்பல் முனையத்தின் வசதிகளை பயணிகள் பார்வையிட்டனர்.
ஒரே நாளில் 3,600: பயணிகள் இதையடுத்து, அடுத்த 1,800 பயணிகள் அக்கப்பலில் தங்களது பயணத்தை தொடங்கினர். அந்த வகையில், ஒரே நாளில் 3,600 பயணிகளின் பயணத்தை சென்னை துறைமுகம் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. இந்த 3 மாத காலத்தில் எம்.வி.எம்பிரஸ் சொகுசு கப்பல் மொத்தம் 21 கடல் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் ஹம்பாந்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன்துறை, ஆகிய சர்வதேச துறைமுகங்களுக்கும், இந்தியாவின் விசாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும் இந்த கப்பல் இயக்கப்பட உள்ளது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், தமிழகத்தின் விருந்தோம்பலையும் இணைத்து சென்னை துறைமுகத்தை உலகளாவிய சொகுசு கப்பல் வரைபடத்தில் முன்னிலைப்படுத்த இந்த சுற்றுலா சீசன் உதவும் என்று துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.