சென்னை: சென்னையை உலகத்தரம் வாய்ந்த, பெருநகரமாக மாற்றும் வகையில் சென்னை பெருநகர பகுதிக்கான 3-வது மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் 2026-2027-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
விரைவான நகர்மயம், மாறிவரும் பொருளாதாரச் சூழல், அதிகரித்து வரும் உள்கட்டமைப்பு தேவைகள், புதிதாக தோன்றும் சுற்றுச்சூழல், பருவநிலை சார்ந்த சவால்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சென்னை பெருநகர பகுதிக்கு ஒரு விரிவான நீண்டகால திட்டமிடல் கட்டமைப்பு அவசியமாகிறது.
முதலாவது மாஸ்டர் பிளானில் (1976) சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது, மூன்று வட்டச்சாலைகள் அமைப்பது போன்றவற்றுக்கும், 2-வது மாஸ்டர் பிளானில் (2006-2026) செறிவான நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், நீர்நிலைகள் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
தற்போது, முதலாவது, 2-வது மாஸ்டர் பிளான் திட்டத்தின் அடிப்படையில் 3-வது மாஸ்டர் பிளான் 2027-2047) தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இது தொடர்பான துறைசார் ஆய்வுகளை சிஎம்டிஏ மேற்கொண்டுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வேறுபட்ட உலகளாவிய இருப்பிட அமைப்பு (டிஜிபிஎஸ்) ஆய்வுகளை பயன்படுத்தி புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) உதவியுடன் கூடிய டிஜிட்டல் அடிப்படையிலான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
3-வது மாஸ்டர் பிளான் அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்கு, உள்கட்டமைப்பு திட்டமிடலை வலுப்படுத்துவதற்கும், சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு, சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாப்பதற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு சட்டப்பூர்வ கட்டமைப்பாக செயல்படும்.
அந்த வகையில், சென்னையை உலகத்தரம் வாய்ந்த, எதிர்காலத்தேவைகளுக்கு ஏற்ற பெருநகரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக சிஎம்டிஏ சென்னை பெருநகர பகுதிக்கான 3-வது மாஸ்டர் பிளானை தயாரித்து வருகிறது.
2047-ம் ஆண்டுக்குள் இப்பகுதி முழுவதும் ஒருங்கிணைந்த, சமச்சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் விரிவாக்கப்பட்ட பகுதியுடனும் இணைக்கப்படும்.
1,189 சதுர கிலோ மீட்டருக்கான 3-வது மாஸ்டர் பிளானை இறுதி செய்வதற்கும், விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகர் பகுதிகளுக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கவும், சர்வதேச அளவில் அனுபவம் வாய்ந்த திட்ட ஆலோசகரை சிஎம்டிஏ நியமிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.