பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன்

 
தமிழகம்

சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி ஜன.16-ல் தொடக்கம்: 1,500 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

சி.பிரதாப்

சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னையில் ஜன.16 தொடங்குகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 103 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

ஜெர்மனியின் ‘பிராங்ஃப்ர்ட்’ சர்வதேச புத்தகக் காட்சி 1949-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவே உலகின் பெரிய புத்தகக் காட்சியாக தற்போது விளங்குகிறது. அதேபோல், தமிழகத்திலும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி பொது நூலகத்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சென்னையில் பன்னாட்டு புத்தகக் காட்சி 2023-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து 4-வது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி-2026 சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி 16 முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் கூறியது: நடப்பாண்டு பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ‘உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும்’ எனும் கருத்தை மையமாக கொண்டு நடத்தப்படவுள்ளது. இது புத்தகக் காட்சி என்பதை தாண்டி நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு உரையாடலாக இருக்கும்.

2023-ல் பன்னாட்டு புத்தகக் காட்சி 24 நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த முயற்சி விரிவடைந்து நடப்பாண்டு 103 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். 2025-ம் ஆண்டில் 1,354 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தாண்டு 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் இந்த கண்காட்சி பொதுமக்கள் பங்கேற்கும் திறந்த தளமாக மாற்றப்படுகிறது. இதன்மூலம் தமிழக வாசகர்கள், உலக பதிப்பாளர்களை நேரடியாக சந்திக்கும் வரலாற்றுச் சூழலும் உருவாகிறது.

இதுதவிர தமிழகத்தில் இருந்து 90 பதிப்பாளர்களும், 8 இந்திய மாநிலங்களில் இருந்து 42 பதிப்பாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த கண்காட்சியில் கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள், குழு விவாதங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். மாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும், பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்ட 28 இலக்கிய முகவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT