சென்னை: சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆர்.ராமாராவ். கடந்த 46 ஆண்டுகளாக முதல்நிலை (கிளாஸ் 1) ஒப்பந்ததாரராக இருந்து வரும் இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து வழித்தட சாலைகள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முடித்துக் கொடுத்தும், பணிகளுக்கான அளவீடு கணக்கு மற்றும் வவுச்சர்கள் சமர்ப்பித்த பிறகும், ரூ.25.79 கோடிக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த பில் தொகைக்காக 18 சதவீத ஜிஎஸ்டியாக ரூ.4.89 கோடியை ஏற்கெனவே செலுத்திவிட்டேன். விதிகளின்படி 14 நாட்களுக்குள் ஒப்பந்த தொகையை வழங்க வேண்டும். ஆனால், பல மாதங்கள் கடந்தும் மாநகராட்சி நிர்வாகம் பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.இளங்கோவன், “பணிகள் முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை தொகையை வழங்கவில்லை” என வாதிட்டார். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப், “மாநகராட்சியில் தற்போது போதிய நிதி இல்லாததால், ஒப்பந்ததாரருக்கு உரிய தொகையை சிறிது சிறிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், “பணிகள் முடிந்து பில் கையெழுத்தாகி ஓராண்டு ஆகியும் பணம் கொடுக்கவில்லை என்றால், மாநகராட்சி ஆணையரின் சம்பளத்தை நிறுத்தி வைக்கலாமா அல்லது 6 சதவீத வட்டியுடன் சேர்த்து தொகையை வழங்க உத்தரவிடலாமா?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, வழக்கு விசாரணையை டிச.4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். எத்தனை நாட்களுக்குள் ஒப்பந்ததாரருக்கு முழுபணமும் வழங்கப்படும் என்பது குறித்து அன்றைய தினம் மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.