தமிழகம்

வாடகை ஒப்பந்தம் முடிவடையும் முன்பாக மருத்துவ மாணவிகளை வெளியேற்றியது சட்ட விரோதம்: ஐகோர்ட்

செய்திப்பிரிவு

சென்னை: வாடகைக்கு குடியிருப்பவர்களை பலவந்தமாக வெளியேற்றுவதை ஒருபோதும் வேடிக்கை பார்க்க முடியாது என கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மருத்துவ மாணவியை சட்ட விரோதமாக வெளியேற்றிய வீட்டின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பின் மேலாளருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டின் சாவியை மாணவியிடம் ஒப்படைக்கவும் உரிமையாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவம் படித்துவரும் திவ்யா ராஜ் அத்வானி என்ற மாணவி, கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அவருடன் மேலும் 3 மாணவிகளும் அந்த வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், வாடகை ஒப்பந்தம் முடியும் முன்பாக மாணவி திவ்யா ராஜை வீட்டை காலி செய்து கொடுக்கும்படி அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளரான பிரசாத் என்பவரும், வீட்டின் உரிமையாளரும் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் திவ்யா ராஜ் புகார் அளித்துள்ளார். பின்னர் தங்களை படிப்பு முடியும் வரை அந்த வீட்டில் இருந்து காலி செய்யக்கூடாது என செங்கல்பட்டு முதன்மை உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து தடையுத்தரவும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவை மீறி திவ்யா ராஜ் உள்ளிட்ட மாணவிகளை குடியிருப்பு மேலாளரும், வீட்டின் உரிமையாளரும் பலவந்தமாக வெளியேற்றியதாகவும், வீட்டுக்குள் சென்று புத்தகங்களையும், உடைகளையும் எடுக்க அனுமதிக்க வில்லை என்றும் கூறி திவ்யா ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,"வாடகை ஒப்பந்தம் முடியும் முன்பாக மாணவிகளை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுபோல வாடகைக்கு குடியிருப்பவர்களை பலவந்தப்படுத்தி வெளியேற்றுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. உரிமையாளர் மற்றும் மேலாளரின் இந்த செயல், சட்டத்துக்கு புறம்பானது மட்டுமின்றி, அவர்களால் அந்த மாணவிகளின் மருத்துவ படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு உரிமையியல் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட உரிமையாளரும், மேலாளரும் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, அந்த வீட்டின் சாவியை சம்பந்தப்பட்ட மாணவியிடம் உரிமையாளர் ஒப்படைக்க வேண்டும். மேலும், மனுதாரர் உள்ளிட்ட மாணவிகளுக்கு தேவைப்பட்டால் போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தை இருதரப்பும் உரிமையியல் நீதிமன்றம் மூலமாக தீர்வு காண வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT