சென்னை: சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ சிவகுமாருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குழந்தைகளை வைத்து தவெகவினர் பிரச்சாரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், “அரசியல் கட்சிகள் அல்லது கட்சிகளின் வேட்பாளர்கள் என எவராலும் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் குழந்தைகளை ஈடுபடுத்த முடியாது. இருப்பினும் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பது குறித்து விவாதங்கள் உள்ளன.
பொருட்களை வாங்குவது, அரசியல் கட்சித் தலைவர் மீதான ஈடுபாடு ஆகிய இரண்டிலும் குடும்பத்தின் மீது குழந்தைகளின் செல்வாக்கு என்பது, உலகம் முழுவதும் பெரும் விவாதத்துக்குரிய ஒரு விஷயம்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சமாதானப்படுத்துவது போலவே, குழந்தைகளும் வீட்டில் உள்ள பெற்றோர்களையும் பெரியவர்களையும் வழிநடத்துகிறார்கள். இது இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
குழந்தைகள் தெய்வத்தின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான மக்கள் குழந்தைகளைத் தங்கள் மூதாதையர்கள் மற்றும் முன்னோர்களின் மறுபிறவியாகக் கருதுகின்றார்கள். அவர்களின் வார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
கலாச்சார ரீதியாகவும், குறிப்பாக தற்கால நவீன சூழலிலும், பெற்றோரின் விருப்பங்களில் குழந்தைகள் பெரும் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், இந்த வழக்கில் ஓர் அரசியல் கட்சித் தலைவர், குழந்தைகளிடம் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தனக்காகப் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக்கொள்வது என்பது தேவையற்ற தாக்கம் செலுத்துவதாக கருதப்படுமா என்பதுதான் கவனிக்கத்தக்கது.
இது தொடர்பாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தேவையற்ற தாக்கம் என்ற சொல்லின் வரையறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் ஷிவ் கிர்பால் சிங் வழக்கில் விரிவாகப் பரிசீலித்துள்ளது.
இந்தச் சூழலில், இந்த வீடியோக்களில் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களிடம் செல்போன்கள் இல்லை, அவர்களால் ரீல்ஸ் (reels) செய்யவும் முடியாது. வீட்டில் உள்ள பெரியவர்கள்தான், குழந்தைகளுக்கு அந்தத் தலைவரின் வேண்டுகோளைக் காண்பித்து, இத்தகைய செயல்களைச் செய்ய வைத்து, ரீல்ஸ்களை உருவாக்கி, அவற்றைப் பிரபலப்படுத்தியுள்ளனர்.
எனவே, இது முடிவெடுக்கும் விருப்பத்தை தடுத்து, குழந்தைகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய செயலாகக் கருதப்பட முடியாது” என்று தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், “அதிகபட்சமாக, இது பெரியவர்களை அந்தக் கட்சிக்கும் வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி சம்மதிக்க வைக்கும் முயற்சியாக மட்டுமே பார்க்கப்பட முடியும். குழந்தைகளை இதில் ஈடுபடுத்திய முழுச் செயலும் ரசனை குறைவானது.
மேலும், அவர்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது பெற்றோர்களின் மோசமான வளர்ப்பு முறையையே காண்பிக்கிறது. அதைக் கொண்டு குழந்தைகளை வைத்து பிரச்சார ரீல்ஸ் தயாரிப்பது தரம் தாழ்ந்ததும் அரசியல் உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.
இதைத் தடை செய்வதா அல்லது தேர்தலை ரத்து செய்வதற்கான முகாந்திரமாக ஆக்குவதா என்பது குறித்து நாடளுமன்றம் பரிசீலிக்க வேண்டிய ஒரு விரிவான விவாதமாகும்” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், “சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் உண்மையானவை மற்றும் சரியானவை என்று வைத்துக்கொண்டாலும் கூட, அரசியல் தேர்வை மாற்றியமைப்பதற்காகக் குடும்பப் பாசமும் உணர்ச்சிகளும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, பெரியவர்களின் முடிவெடுக்கும் சுதந்திரத்தை முடக்கும் நிலைக்கு அதை உயர்த்த முடியாது.
மாறாக, இத்தகைய சூழலில் குழந்தைகள் நச்சரிப்பதைக் காரணமாகக் காட்டி, ஒரு குறிப்பிட்ட முடிவை எடுப்பதற்குப் பெரியவர்கள் அதை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டால், அதுவும் அவர்களின் சொந்த முடிவே அன்றி அவர்களின் சுதந்திரமான விருப்பத்தை முடக்கியதாகாது” என்று தீர்ப்பில் நீதிபதி விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.