தமிழகம்

சுற்றுலா வாகன ஓட்டுநரை தாக்கியவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு ரத்து

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்குள் வரக்கூடாது என சுற்றுலா வாகன ஓட்டுநரை தாக்கி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு எழுச்சிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் சிலம்பரசன், அதன் கொள்கை பரப்புச் செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் கர்நாடகாவில் இருந்து ஈரோடு வந்த சுற்றுலா வேனை மறித்து, அதன் ஓட்டுநரை தாக்கி, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்குள் யாரும் வரக்கூடாது என மிரட்டி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

தமிழகம் மற்றும் கர்நாடக மக்களிடையே பகைமை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக, இவர்களை ஈரோடு வடக்கு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிலம்பரசனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிலம்பரசன், தன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “இந்த விவகாரத்தில் குண்டர் தடுப்புச் சட்டம் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை சரியாக விசாரிக்காமல் அதிகாரிகள் கண்மூடித்தனமாக முடிவு எடுத்துள்ளனர்” என வாதிட்டார். இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிலம்பரசன் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT