மாநகராட்சி சார்பில், பொது கழிப்பிட மேலாண்மை திட்டத்தின் கீழ், சென்னையில் இதுவரை 474 இடங்களில் 5,176 இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்கள் (இண்டியன் டாய்லட்) அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையிலும், தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், எளிதாக பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் வகையில், பொதுக் கழிப்பிட மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 260 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 3,271 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கழிப்பிட இருக்கைகளின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக 214 இடங்களில் 1,905 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு இம்மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது வரை மொத்தமாக 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 5,176 கழிப்பிட இருக்கை களுடன் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஜூன் மாத இறுதிக்குள் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 1.262 இடங்களில் 10.437 கழிப்பிட இருக்கைகளாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கழிப்பிடத்துக்கும் தனித்தனியாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, அட்டவணைப்படி தொடர்ந்து சுத்தம் செய்து பராமரிக் கப்பட்டு வருகிறது. இந்தப் பணி யாளர்களின் பாதுகாப்புக்காக கையுறை, முகக்கவசம், காலணி கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இவர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள், ரசாயனங்களை முறையாக கையாளுதல், தனிப்பட்ட சுகாதாரம் குறித்தும் தொடர் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மக்களின் தேவைக்கேற்ப மாநகராட்சிப் பூங்காக்கள், மயான பூமிகள் உள்ளிட்ட இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
இந்த பொதுக் கழிப்பிட மேலாண்மைத் திட்டமானது, திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதைத் தவிர்த்து பொதுசுகாதாரத்தை மேம்படுத்துகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் 1913 என்றதொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்திடும் தகவல்களின் அடிப்படையில், சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு மாநகராட்சி சார்பில் கழிப் பறைகள் கட்ட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிப்பறை தூய்மை விழிப்புணர்வு: சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிப் பறை பகுதிகளில் 'நம் கழிப்பறை நம் பொறுப்பு' என்ற பிரச்சாரக் கருப்பொருளில் அப்பகுதிகளைச் சார்ந்த மக்கள் பங்கேற்கும் சமூகக் கூட்டம் இன்று (பிப்.8) நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், குப்பைகளை யும், சானிட்டரி நாப்கின்களையும் குப்பைத் தொட்டியில் போடுதல், கழிப்பறைக்கு உள்ளேயும், வெளி யேயும் குப்பை கொட்டுவதைத் தவிர்த்தல், கழிப்பறைகளை சேதப்படுத்துவதைத் தடுத்தல் குறித்தும் எடுத்துரைத்தல் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் அந்தந்த பகுதி பொதுமக்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை வழங்கலாம் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.