செங்கல்பட்டு: மதுரையில் பிரபல நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நகைக்கடைகளில் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகைக்கடை உரிமையாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அனைத்து நகைக்கடைகளிலும் உயர்தர கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். கடையின் முன்புறம் மட்டுமின்றி பின்புறம், நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அவை தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும்.
கடைகளில் நவீன எச்சரிக்கை அலாரம், சென்சார் கருவிகள், அவசர காலங்களில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். நகைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகளை மேம்படுத்துவதுடன், இரவு நேரங்களில் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
அலட்சியம் வேண்டாம்
கடைகளில் புதிதாகப் பணியில் சேர்க்கப்படும் ஊழியர்களின் பின்னணியை முறையாகச் சரிபார்க்க வேண்டும். கடைக்கு வரும் சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். கடையைத் திறக்கும்போதும், மூடும்போதும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஏதேனும் சந்தேகத்துக்கிடமான சம்பவங்கள் அல்லது நபர்களின் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். நகைக்கடைகளின் பாதுகாப்பில் உரிமையாளர்கள் அலட்சியம் காட்டாமல், காவல் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.