எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் | கோப்புப் படம்
புதுச்சேரி: “விழாக்களுக்கும், டென்னிஸ் விளையாடுவதற்கும் மட்டுமே நேரம் ஒதுக்கி, சட்டம் - ஒழுங்கை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கவனிப்பதில்லை” என்று எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி என்டிஏ கூட்டணி தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். இந்தக் கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சி இடம் பிடித்துள்ளது. இக்கட்சியின் தலைவராக ஜோஸ் சார்லஸ் மார்டின் உள்ளார். லாட்டரி அதிபர் மார்டின் மகன் இவர். என்டிஏ கூட்டணியில் லஜக இடம் பிடித்துள்ளது. இக்கட்சி கடந்த தேர்தலில் புதுச்சேரியில் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வென்றது. எம்எல்ஏவான ஜோஸ் சார்லஸ் மார்டின் அமைச்சர் பதவிக்காக முயற்சி எடுத்தார். ஆனால், ரங்கசாமி அவருக்கு அமைச்சர் பதவி தரவில்லை.
இந்நிலையில் என்டிஏ கூட்டணியில் உள்ள எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளியிட்ட விடியோ பதிவில், “முதல்வருக்கு முதல் நாளிலிருந்தே சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் போதிய ஈடுபாடு இல்லை. விழாக்களில் பங்கேற்பது, டென்னிஸ் விளையாடுவது, ஆரோவில்லுக்குச் சென்று காபி குடிப்பது எனத் தனது பொழுதைக் கழித்துக்கொண்டு, தன்னை எளிமையான முதல்வராகக் காட்டிக்கொள்கிறார். எளிமையான வாழ்க்கை வாழ்வதாகக் கூறினாலும், அவர் வசதியான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்.
புதுச்சேரியில் கோஷ்டி மோதல்களால் ஏற்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய குற்றங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதில் காவல் துறையும், உளவுத் துறையும் தோல்வியடைந்துள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான சரியான முடிவுகளை முதல்வர் எடுக்க வேண்டும்.
அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்குவதிலேயே கால தாமதம் செய்த முதல்வரின் செயல்திறன் எந்த அளவில் உள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
இதுவரை நிரந்தர சபாநாயகர் கூட நியமிக்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு உரிய ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கவில்லை. கல்வி நிறுவனங்களில் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டிய நிலை உள்ளது.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கும் அரசு, தனது செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.