தமிழகம்

“இந்துக்களுக்கு விரோதமாக அறநிலையத் துறை...” - காடேஸ்வரா சுப்பிரமணியம் கருத்து

ஆ.நல்லசிவன்

பழநி: “இந்துக்களுக்கு விரோதமாகத்தான் அறநிலையத் துறை இருக்கிறது. தமிழக அரசு சரியான வழியில் நடக்கவில்லை” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டினார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டி, பழநி முருகன் கோயிலில் காடேஸ்வரா சுப்பிரமணியம் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில், கடந்த திமுக அரசுக்கும், தற்போதைய தவெக அரசுக்கும் உடன்பாடு இல்லை. இந்துக்களுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி, முருக பக்தர்களுக்கும், இந்து மக்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. அதற்காக, நீதிபதிகளை மனதார பாராட்டுகிறோம்.

திருப்பரங்குன்றம் மலைமீது இருப்பது தீபத்தூண் இல்லை, நில அளவை கல் என்று மதுரை ஆட்சியருக்கு தவறுதலாக சொல்லி இருக்கிறார்கள். இந்துக்களுக்கு விரோதமாக இருக்கும் இந்த அரசாங்கத்தின் தூண்டுதலின்பேரில் ஆட்சியர் அப்படி சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் மன்னிப்பு, வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலை வரும்.

அறநிலையத் துறையின் நிலை மோசமாக உள்ளது. கடவுளின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இந்த துறையில் இருக்கிறார்கள். குறிப்பாக, கிறிஸ்துவ அதிகாரிகள் நிறைய இருக்கிறார்கள். இந்துக்களுக்கு விரோதமான அறநிலையத் துறையாகத் தான் இருக்கிறது. தமிழக அரசு சரியான வழியில் நடக்கவில்லை.

விஜய் திறமை இல்லாத முதல்வராகத்தான் இருக்கிறார். சட்டம் - ஒழுங்கு மோசமாக இருக்கிறது. கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது இந்து முன்னணியை அழைக்க வேண்டும். எங்களை அழைத்தால் எங்கெல்லாம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பதை காட்டுவோம்” என்று அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT