காடேஸ்வரா சி சுப்பிரமணியம் (கோப்புப் படம்)
புதுடெல்லி: கோயில்களுக்கு செல்போன்களை கொண்டு செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்திருப்பது பக்தர்களை எரிச்சலடைய வைத்துள்ளதாகவும், அதோடு, செல்போன்களை பாதுகாக்க கட்டணம் வசூலிப்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட கோயில்களில் செல்போனுக்கு தடை என்பதும் அதை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிப்பதும் மக்களிடையே பெரிய அளவில் கடும் கண்டனத்தையும் அரசின் மீது அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று செல்போன் என்பது பேசுவதற்கு, ஃபோட்டோ எடுப்பதற்கு மட்டுமல்லாமல் பலவகையிலும் மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு பொருளாக உள்ளது. இதுபோன்ற தடை உத்தரவால் சாதாரண அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேசமயம் ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் படம் எடுக்க போட்டோ வீடியோவுக்கு கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு குடும்ப திருமண நிகழ்வை நினைவில் கொள்ள அதனை பயன்படுத்தி கொள்ளை கட்டணம் வசூலிக்க இந்து சமய அறநிலையத் துறை துணை போகிறது.
கோயிலில் ஆபாசமாக ரீல்ஸ் எடுப்பதை தடுக்க வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை எரித்தவனைப்போல செல்போனுக்கு தடை விதித்து பாதுகாக்க கட்டணம் வசூலிப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோயில் என்பது பிரம்மண்டமானது. ஒரு வழியாக சென்று அதே வழியாக வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் நெரிசல்தான் ஏற்படும். மேலும், அவசர உதவிக்கு அல்லது குடும்பத்தினரிடம் இருந்து அவசர செய்திக்கு என்ன ஏற்பாடு இருக்கிறது? ஐயப்பன் கோயில், திருப்பதி கோயில் போன்ற இடங்களில் கைபேசிகளை பாதுக்காக்க கட்டணம் வசூலிப்பது இல்லை. அவசர உதவிக்கு அறிவிப்பு வசதி முதலானவை சிறப்பாக செயல்படுகின்றன.
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் எப்படி வசூல் வேட்டை நடத்தலாம் என்பதிலேயே இந்து சமய அறநிலையத் துறை குறியாக இருப்பது வெட்கக்கேடானது. 56 கோயில்களில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் வருகின்ற இடத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வரை வசூலாகும். இதனை முறைகேடாக பயன்படுத்தவும் ஏதுவாகும்.
இன்று ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் செல்போன் உள்ளது. அப்படி பார்த்தால் ஒரு குடும்பம் கோயிலுக்கு வந்து செல்ல சில நூறு கொடுக்க வேண்டும் என்ற நிலையும் மேலும் பலவிதமான தொந்தரவுகளும் தந்து கோயிலுக்கு வருவதற்கு எரிச்சலை தமிழக அரசு ஏற்படுத்துவது நியாயமா?
வயதானவர்கள் சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை செல்போன் வாயிலாக காதில் கேட்டுக்கொண்டு அமைதியாக தியானம் செய்கின்றனர். இதனை தடுப்பது நியாயமா? வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களில் இதுபோன்று தலையிட முடியுமா?
எனவே, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இந்த திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் செல்போன் பாதுகாப்பை இலவசமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்து முன்னணி அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் அறிவிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.