சென்னை: நெல்லை விரைவு ரயிலில் ரூ. 4 கோடி பிடிபட்ட விவகாரத்தில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில நிர்வாகியான கேசவ விநாயகம் உள்ளிட்டோருக்கு வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 கோடி ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம் மற்றும் நிர்வாகிகளான எஸ்.ஆர்.சேகர், கோவர்தன், விக்னேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 13 பேரும் நேற்று, ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரபாண்டியன் முன்பாக ஆஜராகி, குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டனர்.