சென்னை: குடியிருப்பு, வணிக, தொழிற்சாலைக் கட்டிடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டிட அனுமதி வழங்குதல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டிட அனுமதிக்கான உச்ச வரம்பு உயர்வு ஆகியவற்றுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கையின் போது, “குடியிருப்புக் கட்டிடங்கள், வணிகக் கட்டிடங்கள், சிட்கோ, சிப்காட், எல்காட் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற்சாலை மனைப்பிரிவுகளில் அமையும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்” என அமைச்சர் ராஜ்குமார் அறிவித்தார். இதன் அடிப்படையில், வீட்டுவசதித்துறையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 8,070 சதுர அடி (750 ச.மீ.) எப்எஸ்ஐ பரப்பளவு வரை உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும். இதன்மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி அலுவலகங்களுக்குச் செல்லாமலேயே கட்டிட அனுமதி பெறலாம்.
மேலும், 3,230 சதுரஅடி (300 ச.மீ.) எப்எஸ்ஐ பரப்பளவு வரை உள்ள வணிகக் கட்டிடங்களுக்கு இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. தொழிற்சாலை கட்டிடங்களை பொறுத்தவரை, சிட்கோ, சிப்காட், எல்காட் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற்சாலை மனைப்பிரிவுகளில் அமையும் 26,900 சதுரஅடி (2,500 ச.மீ.) பரப்பளவு வரை உள்ள கட்டிடங்களுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது.
இம்முறையில், தமிழ்நாடு ஒற்றைச்சாளர இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டிடக்கலை வல்லுநர்கள் அல்லது Grade-I பதிவு செய்த பொறியாளர்கள் மூன்றாம் தரப்பாக செயல்பட்டு, தள ஆய்வு, ஆவண சரிபார்ப்பு, விதிமுறை இணக்கத்தை உறுதிசெய்தல் மற்றும் மின்னணு சான்றிதழ் வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்வர்.
அதிகாரப்பகிர்வு
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் குடியிருப்புக் கட்டிட அனுமதிக்கான அதிகாரம், தற்போதுள்ள 10 ஆயிரம் சதுர அடியிலிருந்து 16,140 சதுர அடியாக (1,500 ச.மீ.) உயர்த்தப்படுகிறது.
பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் அமைப்புகளுக்கான கட்டிட அனுமதிக்கான அதிகாரம் 10 ஆயிரம் சதுர அடியிலிருந்து 12,912 சதுர அடியாக (1,200 ச.மீ.) உயர்த்தப்படுகிறது.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வணிகக் கட்டிட அனுமதிக்கான அதிகாரம், 2,000 சதுர அடியிலிருந்து 5,380 சதுர அடியாக (500 ச.மீ.) உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் சிறிய அளவிலான கட்டிடங்களுக்கு எளிதாக அனுமதி பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.