சென்னை: பதிவுத்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 1908-ம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் 78-வது பிரிவின்கீழ் மாநில அரசு பத்திரப் பதிவுக் கட்டணங்களை நிர்ணயிக்கவும், திருத்தவும் அதிகாரம் பெற்றுள்ளது.
அதன்படி தயாரிக்கப்பட்ட பதிவுத்துறையின் கட்டணப் பட்டியலில், பிழை திருத்தல் ஆவணங்கள் தொடர்பான விதி 1(சி)-ல் திருத்தம் செய்ய பதிவுத்துறை தலைவர், அரசுக்கு முன்மொழிவு அனுப்பியிருந்தார்.
1899-ம் ஆண்டு இந்திய முத்திரைத் தாள் சட்டத்தின் 47(பி) பிரிவின் வரம்புக்குள் வரும் பிழை திருத்தல் ஆவணங்களுக்கு இந்தத் திருத்தம் பொருந்தும் வகையில் முன்மொழிவு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த முன்மொழிவை தமிழக அரசு கவனமாகப் பரிசீலித்து முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து, பிழை திருத்தல் ஆவணங்கள் தொடர்பான கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தம் குறித்த அறிவிப்பு அரசிதழின் சிறப்பு வெளியீட்டிலும் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவில் பிழை திருத்தல் ஆவணங் களுக்கு பொருந்தும் கட்டண விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம், அவற்றின் பதிவுக்கான நடைமுறை மேலும் முறைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.