“எதிர்பார்த்த எந்த முன்னேற்றமும் தமிழகத்தில் காணப்படவில்லை. இங்கு இரட்டை இன்ஜின் அரசு என்பது காலத்தின் தேவையாக உள்ளது” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழக மக்களின் எதிர்காலத்தை பற்றி நினைவுபடுத்தவே நான் இன்று இங்கு வந்துள்ளேன். தமிழகம் திராவிட கலாசாரத்தின் தொட்டில். நாம் அனைவரும் திராவிடர்கள். வரலாற்று ரீதியாக பார்த்தால், ஆங்கிலேயர் காலத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த மாகாணமாக இருந்தோம்.
சென்னை தான் அதன் தலைமையகமாக இருந்தது. என்டிஆர் கூட தனது கலை பயணத்தை இங்குதான் தொடங்கினார். இன்றைக்கு ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்கள் சென்னை விமான நிலையத்தை விட வேகமாக முன்னேறிவிட்டன. ஆந்திராவில் கள்ளச்சாராயம் என்ற பேச்சே இல்லை.
ஆனால், தமிழகத்தில் உள்ள நகரங்களின் உட்கட்டமைப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதே பழைய சாலைகள். பலத்த மழை பெய்தால் வெள்ள அபாயம். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 59 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 39 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எதிர்பார்த்த எந்த முன்னேற்றமும் தமிழகத்தில் காணப்படவில்லை. ஐடி துறையில் ஹைதராபாத், பெங்களூரு போன்றவை எல்லைகளை தாண்டி சென்றுவிட்டன. சென்னையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. உலகளாவிய நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பவர்கள் தமிழர்கள். ஆனால், அவர்களின் திறமைகள் தமிழகத்துக்கு பயன்படுவதில்லை.
எனவே, உங்களுக்கான அதிகாரமளித்தல், வேலைவாய்ய்பு, பிரகாசமான எதிர்காலத்தை தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வழங்கும். இரட்டை இன்ஜின் அரசு எப்படி செயல்படும் என்பதை நான் பார்த்திருக்கிறேன். இப்போது கூகுள் நிறுவனத்தின் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
ஒரே ஆண்டில் 25.3 சதவீத முதலீடு ஆந்திர பிரதேசத்துக்கு வந்துள்ளது. இதை தனி மாநிலமாக எங்களால் ஈர்க்க முடியாது. இரட்டை இன்ஜின் அரசு என்பது புல்லட் வேக வளர்ச்சியாகும். இது காலத்தின் தேவை. அதேசமயம் ஒற்றை இன்ஜின் அரசு,அரசியல் லாபம் நோக்கம் கொண்டது. மாநிலங்கள் மற்ற மாநிலங்களுடன் போட்டியிட வேண்டும். அதேசமயம் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். நமக்கு தாய்மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நம் நாடு ஒன்றுதான்.
அனைவரும் பாரத மாதாவின் பிள்ளைகள். அதைவிடுத்து தெற்கு, வடக்கு என்று பேசி கொண்டிருக்கக் கூடாது. எனவே, தமிழக மக்களே சிந்தியுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது. தவறவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளை நீங்கள் இழக்க நேரிடும்.
தொகுதி மறுவரையறையில் பிரதமர் மோடியை தமிழகம் தோற்கடித்து விட்டதாக ஸ்டாலின் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. நானும் திராவிடன் தான். அதை மறக்காதீர்கள். இந்த மசோதாவால் எந்த மாநிலமும் இடங்களை இழக்காது, 50 சதவீத இடங்கள் கூடத்தான் செய்யும். அதில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு. இதில் தென்னிந்தியா எப்படி இடங்களை இழக்கிறது? திமுக-வும், காங்கிரஸும் பெண்களுக்கு எதிராக துரோகம் இழைத்து விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.