இடம்: சென்னை அண்ணசாலை

 

படம்:எஸ். சத்தியசீலன்

தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஏப்.12 வரை மிதமான மழை வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஏப்.12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா, தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்.7) ஓரிரு இடங்களிலும், நாளை ஒருசில இடங்களிலும், 9, 10 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11, 12 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

          

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். 8- முதல் 10-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை ஒட்டியே இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் தலா 8 செமீ, அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அணை, திருச்சி மாவட்டம் நந்தியாறு, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தலா 7 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT