படம்: வி.எம்.மணிநாதன்

தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அக்.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை (அக்.2) முதல் அக்.7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட கடலோர தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஆக்.1) முதல் 4-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

5, 6 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 7-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தும்மனப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் இறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், சேராப்பட்டு ஆகிய இடங்களில் தலா 7 செமீ, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, ஜமுனாமரத்தூர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, கரூர் மாவட்டம் கடவூர், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT