சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆக.27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் (ஆக.22), நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்டு 24, 25 தேதிகளில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்டு 26, 27 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, கொள்ளிடத்தில் தலா 7 செமீ, புதுச்சேரி பாகூர், கடலூரில் தலா 6 செமீ, திருப்பூர் தெற்கில் 5 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் வெட்டிக்காடு, திருப்பூர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.