படம்: ஜெ.மனோகரன்
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (ஆக.30) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 31-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
செப்.1 முதல் 3-ம் தேதி வரை வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். 4-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் செப்.2-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி சேலம் மாவட்டம் கருப்பூரில் 5 செமீ, நீலகிரி மாவட்டம் பந்தலூர், பார்வூட்டில் தலா 4 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலா, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.