தமிழகம்

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு

மு.வேல்சங்கர்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் செப்.23, 24 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி. ஆர்.துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் பூங்குணத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.21) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அன்றைய தினம் மாலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டது.

இது செவ்வாய்க்கிழமை காலை அதே பகுதிகளில் நிலவியது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்து, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளை செப்.24-ம் தேதி காலையில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையில் கரையை கடக்கக்கூடும்.

இதுதவிர, சுமார் 3.1 முதல் 7.6 கி.மீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி வரை, கர்நாடகா மற்றும் கடலோர ஆந்திரா வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.22) மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.23, 24 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.23-ம் தேதி ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

செப்.25, 26 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக் கடல், வடதமிழக கடலோரப் பகுதி, கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் செப்.24-ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும்.

இதுதவிர, மத்திய வங்கக்கடல் பகுதி, அதனை ஒட்டிய வடக்கு மற்றும் தெற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா கடலோர பகுதி, தெற்கு ஆந்திர - மேற்கு வங்க கடலோர பகுதிகளில் செப்.26-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி தேதிகள் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT