தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

மு.வேல்சங்கர்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 31) முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர். துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிழக்கு உத்தரப் பிரதேசம் முதல் தென்தமிழகம் வரை விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 31) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

          

ஏப்.1,2 ஆகிய தேதிகளில், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்.3, 4 ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஏப்.2-ம் தேதி வரை பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.3,4 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT